Tuesday, 29 September 2026

Stoltzekleiven, Norway பயணம்

என்னதான் அறிவு ஆயிரம் அறிவுரை/தெளிவுரையை எடுத்துச் சொன்னாலும், 
இந்த குரங்கு மனம் பழைய நினைவுகளிலேயே சுழன்று தவிக்கிறது. 
ஆதலால் யாருடனும், எந்த நிகழ்வுகளிலும் பெரிதாக கலந்து கொள்வதில்லை. 


சென்று வாரம் எதோச்சையாக பிரபஞ்சன் அவர்கள் எழுதிய கவிதை கண்ணில் பட்டது
"
எவ்வளவு பிரச்சனைகளுக்கு 
மத்தியிலும் ஒரு பூ 
பூக்கத் தானே செய்கிறது "
என்ற கவிதை தற்காலிக ஆறுதலை தந்தது.

அன்று மதிய நேர உணவு இடைவெளியில் அலுவலக நண்பர் Stoltzen பந்தயத்தில் கலந்து கொள்கிறாயா? என்று கேட்டார். அதைப்பற்றி முழுமையாக தெரியாமல்.. முயற்சிக்கிறேன் என்று சொன்னேன் இடைவேளை முடிந்ததும் அதற்கான அழைப்புதல் மற்றும் விபரங்களை உடனே எனக்கு அனுப்பி இருந்தார். 
அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அப்போட்டியில்  என்னை இணைத்தும் கொண்டார்.

பந்தய விபரங்களை பார்த்ததும்தான் இது தவறான முடிவொ எனப்பட்டது. இருந்தாலும் சொல்லியாச்சு பாத்துக்கலாம் என்று தயாராகி விட்டேன்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டதினால் இரண்டு நன்மைகள் கிடைத்தது. 
ஒன்று இலக்கை அடைந்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி. 
இரண்டாவது என்னுடைய உடல் தகுதி எந்த இடத்துல இருக்குன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சது. 

முன்பெல்லாம் மனைவி இருந்தபோது ஏரியால நடை பயிற்சி போவது இல்லையென்றால் மலையேறுவது என்று எப்படியாவது இழுத்துட்டு போயிருவா அதனால சுவாசம் ஒரு கட்டுப்பாட்டில் இருந்தது. இப்ப கொஞ்சம் திணறுது.

என்னைக் கேட்டால்,

"
சில போட்டிகளில் 
வெற்றி முதன்மையானது அல்ல 
தன்னிலை அறிதலே போதுமானது"

வாங்க இப்ப Stoltzen பற்றி பார்க்கலாம். 

Stoltzekleiven, பெர்கன் விமான நிலையத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலும், பெர்கன் நகர மையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இங்க என்ன சிறப்பு என்றால் “Stoltzen Opp” பந்தயம்.

Stoltzen Opp பந்தயம் என்பது நார்வேயின் பெர்கன் (Bergen) நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஒரு புகழ்பெற்ற மற்றும் மிகவும் கடினமான, கால்களை நடுங்க வைக்கும் ஒரு செங்குத்தான மலை ஓட்டப்பந்தயமாகும்.

இங்குள்ள மக்கள் உடற்பயிற்சி மற்றும் மலை ஏறுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி அறிய  ஆகச்சிறந்த உதாரணம் தான்—Stoltzen Opp பந்தயம்.

 


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இறுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சவாலை எதிர்கொள்ள பெர்கனின் Sandviken பகுதியில் குவிகிறார்கள்.

 

இந்த புகழ்பெற்ற பந்தயத்தைப் பற்றிய விவரம்:

மொத்த தூரம்: ~900 மீட்டர்

படிக்கட்டுகள்: 908 கரடுமுரடான ஷெர்பா கல் படிகள்

செங்குத்து உயரம்: 301.44 மீட்டர்

சாய்வு கோணம் (Incline): சராசரியாக 35.8%, உச்சக்கட்டமாக 45% வரை!

இந்த பாதை மிகவும் குறுகலாகவும் செங்குத்தாகவும் இருப்பதால், இதில் மேலே செல்ல மட்டுமே அனுமதி உண்டு. பாதுகாப்பு காரணங்களுக்காக படிகளில் கீழே இறங்கி வர யாருக்கும் அனுமதி இல்லை!.

 


பந்தயத்தை முடிப்பவர்கள் முன்கேபோட்ன் (Munkebotn) என்ற எளிதான மண் பாதை வழியாக அல்லது ஃபிலேயன் (Fløyen) மலை வழியாகத்தான் கீழே இறங்க வேண்டும்.  

 

தொடக்க காலத்தில், இந்த பாதை மலைப் புல்வெளிகளுக்கு கால்நடைகளை ஓட்டிச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1937 இல் தான் அவசரகால பொதுப்பணித் திட்டத்தின் கீழ் முறையான கல் படிகள் அமைக்கப்பட்டன.

பிற்காலத்தில், இந்த படிகட்டுகள் சேதமடைந்த போது, அவற்றை சீரமைக்க மற்றும் பலப்படுத்த நேபாளத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற 'ஷெர்பா' (Sherpas) இன மக்கள் வரவழைக்கப்பட்டு, மிக நேர்த்தியாக மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டன.

1979 ஆம் ஆண்டில், Varegg IL  என்ற உள்ளூர் விளையாட்டுக் கழகம் ஒரு சிறிய பந்தயமாக இதைத் தொடங்கியது. முதல் போட்டியில் வெறும் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். ஆனால் இன்று இது ஒரு மிகப்பெரிய திருவிழாவாக மாறிவிட்டது! இதன் Tickets சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுவதால், இப்போது இந்த பந்தயம் இரண்டு நாட்களாக நடத்தப்படுகிறது. 

 

இந்த பந்தயத்தில் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஓட மாட்டார்கள். ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒருவராக தனித்தனியாகத்தான் பந்தயத்தைத் தொடங்குவார்கள். சாதாரண மனிதர்கள் இந்த படிகளைக் கடக்க 15 முதல் 30 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்கள் இதில் படைத்துள்ள சாதனைகள் அசாத்தியமானவை:

ஆண்கள் சாதனை: 7 நிமிடங்கள் 46 வினாடிகள் (Stian Øvergaard Aarvik).

பெண்கள் சாதனை: 9 நிமிடங்கள் 35 வினாடிகள் (Kristin Størmer Steira).

அதாவது, நாம் சமதளத்தில் ஓடுவதை விட அதிவேகமாக அவர்கள் இந்த செங்குத்தான 908 படிகளையும் ஓடிக் கடக்கிறார்கள்!

 

முதல்முறை செல்பவர்களுக்கான பரிந்துரைகள் !

நீங்கள் இந்த போட்டியில் பங்கேற்றாலும் அல்லது சாதாரண நாள்களில் இந்த மலையில் ஏற நினைத்தாலும், இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்:-

ஆரம்பத்திலேயே வேகம் வேண்டாம். தொடக்கப் பகுதி சற்று சமமாக இருக்கும் என்பதால் வேகமாக ஓடத் தோன்றும். ஆனால், அப்படி ஓடினால் பாதி வழியிலேயே மூச்சுத் திணறி, கால்கள் செயலிழந்துவிடும். எனவே, ஆரம்பத்தில் நிதானமாகச் செல்லுங்கள்.

வானிலை முக்கியம்: பெர்கன் நகரில் அடிக்கடி மழை பெய்யும். மழை பெய்தால் இந்தக் கல் படிகள் மிகவும் வழுக்கும். எனவே, நல்ல வழுக்காத, தரையை நன்றாகக் கவ்விப் பிடிக்கும் பிடிமானம் கொண்ட காலணிளைப் பயன்படுத்துங்கள். (பனிக்காலத்தில் பனி உறைந்திருக்கும் என்பதால் இதில் ஏறுவதைத் தவிர்க்கவும்).

பாதை 45% செங்குத்தாக மாறும்போது, கால்களுக்கு ஓய்வு கொடுக்க உங்கள் கைகளால் முட்டிகளை முட்டுக் கொடுத்து முன்னோக்கி நகரலாம்.

 

 நீங்கள் உச்சியை (Sandvikspilen) அடையும்போது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆற்றலும் தீர்ந்திருக்கும், ஆனால் அங்கிருந்து தெரியும் பெர்கன் நகரத்தின் அழகிய காட்சியும் கடலும் நீங்கள் பட்ட அனைத்து வலிக்கும் மருந்தாக அமையும்!