Sunday 16 June 2019

Galdøpiggen, Norway பயண அனுபவம் - பாகம் 2


 முதல் பாகம் பார்க்க இங்கே அழுத்தவும்.
அடுத்த நாள் 9 மணிக்கெல்லாம் எல்லாரும் தயாராகியாட்சி மலை ஏறுவதற்கு...
எந்த ஒரு விசயமும் " முதல் தடவை " என்பது ஆனந்தமும், ஆச்சரியமும் கலந்த ஒரு பிரமிப்பான நிகழ்வாகவே இருக்கும். இந்த பயணத்திலும் மலையின் அடி முதல் உச்சி தொடும் வரை அந்த மகிழ்ச்சி இருந்தது.

நாங்க புறப்பட்ட நேரம், வெண்மேகம் சூழ்ந்து இருந்தது. அந்த காட்சி ஒரு மெல்லிய உடையணிந்த நவநாகரீக மங்கை  போல் இருந்தது.

பொதுவா அழகான விசயங்களை எல்லாம் பெண்களுடன் ஒப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில் இவள் ஒரு
அழகான ராட்சசி...!
பனிக்கட்டி தேகத்தில்
பல மர்மம் உள்ளடக்கி
உயிர் உருக்கும்
சதிகாரி இவள்.

அழகு ஆபத்துதான், ஆனால் நாம் எச்சரிக்கையாக இல்லாமல் இருந்துவிட்டு அழகின் மீது பழிசொல்வது தவறு. காரணம் நாமதான் அதை தேடி போறோம்...😊
மலை ஏறுவதற்கு, சரியான உடை, காலணி(Shoe), தண்ணீர் மற்றும் சிறிது உணவும் அவசியம்.
கோடை காலமாக இருந்தாலும் இங்கு குளிராத்தான் இருக்கும்.
அதனால உடலின் வெப்பம் சீராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் அதே நேரம் உடல் உழைப்பு மற்றும் பயத்தின்  காரணமாகவும் வேர்வையும் அதிகமா சுரக்கும். இந்த இரண்டையும் பொருந்தும்படி நமது உடை தேர்வு இருக்க வேண்டும்.

அதேமாதிரிதான் காலணி(Shoe) தேர்வும் , மண், பாறை மற்றும் பனி இந்த மூன்றிலும் பயணிப்பதற்கு பொருத்தமான காலணியாக இருக்கவேண்டும்

இதெல்லாம் முன்னெச்சரிக்கையாக தேர்வு செய்து, கடினப்பட்டு பாதி  தூர பயணத்தில் பார்த்தால் .... ஆடு,   ஆட்டு குட்டிகள் எல்லாம் ரொம்ப அலட்சியமா அங்கையும் இங்கையும் குதித்து விளையாடுது... இவ்வளவு செங்குத்தான ஒரு மலைப்பாதையில்.. ரொம்ப இயல்பா ஒரு பக்கம் ஆட்டம் மறுபக்கம் ஓய்வு என்று அசத்தியது அந்த ஆட்டுக்கூட்டம்.
பொதுவா விலங்குகள் மனிதர்களை விட மேலானவைகள் தான்
"ஒன்று சுதந்திரத்தின் வானம்
இல்லை மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கை விலங்குகளுக்கு இல்லை"
                                                                   - வைரமுத்து


அதனை தொடர்ந்து பயணத்தை தொடர்ந்தோம், தொடர்ந்து செங்குத்தான பாதையிலே பயணித்து, அப்பாடா செங்குத்தான பாதை முடிய போது என்றெண்ணும் தருவாயில்....!, 

மேலிருந்து பாறைகள் உருண்டு வருவது போல் மிகப்பெரிய இரைச்சல், ஒரு நிமிடம் அடிவயிற்றில் பீதி கிளம்பியிருச்சி, பயத்தோடயே பயணித்து மேல ஏறி பார்க்கும்போது தான் தெரிந்தது அதன் காரணம் (பாறைகளின் ஊடே நன்நீர் பாய்ந்து ஓடுவதால் வந்த இரைச்சி அது)


இதோடு இனி பயணம் இலகுவாக இருக்கும் என்று பார்த்தல், அதானில்லை


ஒவ்வொரு நிமிடமும் நிறைய பயத்தோடயே, அதே நேரம் பாதுகாப்பாய் ஒவ்வொரு அடியாய் மேல முன்னேறிக்கிட்டே இருந்தோம்.
 ஒவ்வொரு அபாயகரமான பாதையையும் கடந்த பிறகு, மனதிற்குள் எழும் மகிழ்ச்சியையும் அனுபவித்து கொண்டேதான் பயணித்தோம்.
குறிப்பாக மழையின் உச்சியில் பயணிக்கும் போது, பள்ளத்தில் உள்ள பனிப்பாறைகள் மெதுவா நகருவதால், பெரிய கண்ணாடி உடையிற மாதிரி ஒரு சத்தம் கேக்கும்...!,  

அந்த ஒரு நொடி போதும் நம் உயிர் வெளிய போயிட்டு உள்ள வரும்.



ஒரு வழியாக கடந்து மேல் மட்டத்திற்கு வந்த பிறகு, வெண்பனியா இருந்தது, பனியில் பயணிக்கிறதும் சவாலான விசயம் தான், ஏனென்றால் கீழ சறுக்கிடாமல் பயணிக்க வேண்டும் அதே நேரம் இன்னொரு சவால் என்னனா, வெண்மேகம் சூழ்ந்து இருந்ததால் பாதையை கண்டுபிடிப்பது சவாலா இருந்தது.




பாதையை அடையாளப்படுத்த குச்சி நட்டு வைத்திருந்தார்கள், ஆரம்பத்தில் குச்சிகளுக்கான இடைவெளி அதிகமா இருந்தது. பல குச்சிகள் பனியால் மூடப்பட்டிருந்தது.

ஒரு வழியா மேல ஏறி பயணத்தின் உச்சியை அடைந்தால் அங்கு ஒரு சிறிய உணவகம் இருக்கு
அங்கு எல்லாமே 5லிருந்து 8 மடங்கு விலை அதிகம் (காரணம் பொருட்களை அங்கு கொண்டு வருவது இயல்பான காரியம் அல்ல - பெரும்பாலும் நேபாள நாட்டு மக்களை பயன்படுத்துகிறார்கள் இப்பணிக்கு)


அங்கு குளிர்பானம் அருந்திவிட்டு சற்று இளைப்பாறி அதன் பின் மெதுவாக கீழே இறங்கினோம்.

ஒவ்வொரு பயணமும் நமக்கு நிறைய கற்று கொடுக்கும்..
->வாழ்வின் அனைத்து பிரச்சனைகளும், உயரமான மலைகள் போன்றதொரு சவாலா இருக்கும்.
சின்ன சின்ன அடிகளாய் வைத்தால் கூட, எந்த பெரிய மலையையும் கட்டாயம் கடக்க முடியும்.

->அனுபவமுள்ளவர்கள் ஊக்கப்படுத்துவார்கள், தேவைப்பட்டால் உதவுவார்கள். சில அரைகுறைகள், தங்களை அறிவு ஜீவி என்று காட்ட, கண்டதை பேசி (அது தப்பு, இது தப்பு, எல்லாம் போச்சு.... என்று )எதிர்மறை எண்ணங்களை திணிப்பார்கள் கூடுமானவரை அந்த எண்ணங்கள் நமது நிழலைக்கூட தொட அனுமதிக்காமல் இருந்தாலே போதும் வெற்றி நிச்சயம். நீங்கள் உயரம் தொட்டவுடன் அதே வாய் உங்களை பாராட்ட வரும்.


அறிவே சிறந்த அணிகலன், அனுபவமே பண்பின் ஊற்று.

No comments: