Thursday 13 June 2019

Galdøpiggen, Norway - பயண அனுபவம் -பாகம் 1


பயணம் அனைவருக்கும் விருப்பமான விசயம் என்றாலும் இயற்கையை காதலிப்பவர்களுக்கு இது போன்ற பயணம் ரொம்பவே பிடிக்கும் என்பதை 100 சதவீதம் என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியும்.

Galdøpiggen பயண அனுபவம் இது தெற்கு நார்வேயில் "Jotunheimen National Park"ல்  உள்ளது.
இதன் சிறப்பு என்னவென்றால் வட  ஐரோப்பாவின் (Scandinavia) மிக உயர்ந்த மலை இதுதான்
கடல் மட்டத்திலிருந்து 2469 மீட்டர் உயரம். அது மட்டுமில்லாமல் இந்த மலை, (glaciar) பனிப்பாறைகள்/ஆறுகளை கொண்டது

அதனாலேயே என்னமோ இந்த பயணம் போலாம்னு முடிவான நாளிலிருந்து ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி மனதில் குடி கொண்டது.
😊😊

முதலில் பனிப்பாறை பற்றி ஒரு சின்ன அறிமுகம் பார்ப்போம். 
எங்கெல்லாம் (பொதுவாக நில பரப்பின் மீது)பனி பொழிவின் வேகம் ஆவியாதலின் வேகத்தை விட அதிகமாக இருப்பின் அங்கு பனிப்பாறை/ பனியாறு உருவாகிறது.  பனி படர்ந்து பல மாதங்களாக, பல வருடங்களாக ஏன் பல நூற்றாண்டுகளாக தங்கி அடர்த்தி மிகுதியால், அழுத்தத்திற்கு உள்ளாகி பாறையாக மாறும். இப்படித்தான் பனிப்பாறை உருவாகிறது.

இவை பனி பொழிவின் கால  அளவீட்டை பொறுத்து பல அடுக்குகளாக(layers) இருக்கும். மேல இருக்குற அடுக்கு எடையின் காரணமாகவும், புவிஈர்ப்பு விசையின் காரணமாகவும், கீழ இருக்குற அடுக்கின் மீது உராய்ந்து மெல்ல நகரும்.
அப்புடி நகரும் போது ஏற்படும் சின்ன பிளவிற்குள்  மாட்டிகிட்டா கூட கதை முடிந்தது காரணம் அதன் ஆழம் 50மீட்டர் வரை இருக்கும்.
 
சிறப்பு என்னவென்றால்:-

புவியில் உள்ள மிகப்பெரிய நன்னீர்  இருப்பு பனிப்பாறைகளே ஆகும். உலகிலுள்ள மொத்த நீர்  அளவிலும், கடல்களுக்கு அடுத்தபடியாகப் பெரிய அளவான நீர், பனிப்பாறைகளாகவே உள்ளன.

😊😊

இந்த மலை எறுவதற்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கு
1.Spiterstulen லிருந்து ஏறலாம், இதுதான் இலகுவான வழி பெரிய அபாயம் கிடையாது.
Spiterstulen அமைத்திருக்குற இடம் கடல் மட்டத்திலிருந்து 1100 மீட்டர் உயரம், ஆக 1100 மீட்டர் உயரத்திலிருந்து 2469 மீட்டர் உயரம் ஏற வேண்டும்.




சுமார் 5.7 கிலோ மீட்டர் தூரமும், அதனை கடக்க 5மணி நேரமும் பிடிக்கும் என்னை போல் இருப்பவருக்கு.  ( ஆனால் அனுபவமும், உடல்தகுதியும் உள்ளவருக்கு  4 மணி நேரமே போதுமானது)

வெறும் 5.7 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டீர்களேயானால் பயணத்தில் கால் பாதி  தூரம் செங்குத்தாகவே இருப்பதுதான் (குறிப்பாக 60~80 டிகிரி கோணம் )

2.Juvasshytta லிருந்தும்  ஏறலாம் இதுவும் இலகுவான வழி ஆனால் அபாயம் நிறைந்தது நிபுணர்கள் உதவியுடன் தான் செல்ல முடியும்.
இதுவும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தான்.  ஆனால் 3 மணி நேரத்தில் கடந்திடலாம்.


Juvasshytta அமைத்திருக்குற இடம் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம், ஆக 1800 மீட்டர் உயரத்திலிருந்து 2469 மீட்டர் உயரம் ஏற வேண்டும்.
இதில அபாயம்னு சொன்னது என்னவென்றால் ஒரு 45 நிமிட பனிப்பாறை (Styggebreen glacier)  மீதான பயணம். அதற்குத்தான் நிபுணர்கள் துணை வேண்டும். அவர்களை ஏற்பாடு செய்வது எளிது. அவர்கள் ஒவ்வொருவரது இடுப்பிலும் குறிப்பிட்ட  இடைவெளி விட்டு கயிறு கட்டி ஒன்றாக அழைத்து செல்வார்கள். அப்பொழுதுதான் பனிப்பாறை வெடிப்புக்குள் விழுந்தால் காப்பாற்ற முடியும்.

இனி பயணம் பார்க்கலாம்...




Bergen லிருந்து 350 கி .மீட்டர் தூரம் சுமார் 6 மணி நேரப்பயணம். புறப்பட்ட அன்றே மலை ஏறுவது என்பது திட்டம் அதனால்  விடியற்கலை 4.00 மணிக்கு ஒரு மகிழ்வுந்தில்(car ) ஐவர் கொண்ட கூட்டணியுடன் புறப்பட்டோம்.


Dale என்ற இடம் வந்தவுடன் தேனீர் அருந்தலாம் என்று பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தினோம் ஆனால் விடியற்கலை என்பதால் பூட்டியிருந்தது.

ஐரோப்பாவை பொறுத்தவரை கடன் அட்டை (credit  card)  பயன்படுத்தி நாமே பெட்ரோலைமகிழ்வுந்தில் நிரப்பி கொள்ள முடியும்.
 பெட்ரோல் நிலையம் திறந்திருந்தால்பெட்ரோல் நிரப்பியபின் பணமாகவும் கொடுக்கலாம்.
பொதுவாக பெட்ரோல் நிலையங்களில் உணவு, தேநீர், வாகனத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும்.

Dale இந்த ஊரின் சிறப்பு என்னவென்றால், உள்நாட்டு கம்பளி தொழிற்சாலை இங்குள்ளது. நார்வே முழுக்க இவர்களது பொருட்களுக்கு வியாபாரம் உண்டு. காரணம் உள்நாட்டு உற்பத்திக்கு மக்கள்  கொடுக்குற மரியாதை. (விலை அதிகமாக இருந்தாலும்இந்த மாதிரி தான் அவர்கள் தங்கள் தேசப்பற்றை காட்டுகிறார்கள்)

நாங்கள்  பயணித்தது ஒரு மின் மகிழ்வுந்து (Tesla - Electrical Car) அதனால எங்களுக்கு பெட்ரோல் நிரப்ப எந்த  தேவையும்  இல்லை, மின் மகிழ்வுந்தின் இன்னொரு சிறப்பு, சுரங்கப்பாதை பராமரிப்பு வரியும் கட்டத்தேவையில்லை 
இங்கயும் நிறைய TOLL இருக்கு (காரணம் மலைகள் நிறைந்த நாடு அதனால நிறைய  சுரங்கப்பாதை அமைத்திருக்கிறார்கள்) ஆனால் மின்சார வாகனங்களுக்கு வரி விளக்கு உண்டு.

பொதுவா எல்லா வாகனங்களுக்கும் இதர வரிகள் உண்டு, மின் வாகனங்களுக்கு சில சலுகைகள் உண்டு அவ்வளவே - காரணம் இயற்கையை பாதுகாக்கணும் என்கின்ற அக்கறை.
நம்மை போல் எல்லாம் இங்கே அரசாங்கம் செயல்பட முடியாது (நமது எரிபொருள் தேவையை காரணம் காட்டி விவசாய நிலத்தில் HydroCarbon திட்டம் கொண்டு வருகிறார்கள். அதன் பின்னனியை ஆராய்ந்தால், அதை தனியாரிடம் கொடுத்து, என்ன விலைக்கு நமது அரசாங்கம் இறக்குமதி செய்கிறதோ அதே விலையையே அவர்களுக்கும் கொடுப்பார்களாம். அப்புறம் என்ன ---- க்கு விவசாய நிலத்தை நாசம் பண்றிங்க, பேசாம அதற்கு மொத்தமாவே இறக்குமதி செய்திறலாமே என்றால், நம்ம தேசப்பற்றை கேள்வி கேட்பார்கள்)



மின்கலனில் (Battery ) மின்னுட்டம் (charge ) செய்வதற்கு  வாகனத்தை Aurlandsvangen ல் நிறுத்தினோம்
இந்த Tesla நிறுவனம் ஐரோப்பா முழுக்க  மின்கலனில் (Battery ) மின்னுட்டம் (charge ) செய்வதற்கு நிலையங்கள் வைத்திருக்கிறார்கள் இலவசமாகவே நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
"Sognefjell" தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணத்தை தொடர்ந்தேம். (route 55) இதுவும் நார்வேயின் பிரபலமான இயற்கை காட்சிகள் நிறைந்த வழிப்பாதை.

கோடையில் மட்டுமே அனுமதி கிடைக்கும் இவ்வழியை பயன்படுத்துவதற்கு. இயற்கை வனப்புகளை மிகுதியாக தன்னுள் கொண்ட வழித்தடம் அது.

பனிக்காலத்தில் சென்றால் முழுதும் மூடிய முகமதிய பெண்ணாகத்தான் காட்சியளிப்பாள்.
அதனால் கோடையில் சென்றால் மட்டுமே சிறப்பு மொத்த அழகையும் ரசிக்க முடியும்.
அதோடு பயணமும் பாதுகாப்பாய் இருக்கும். (அபாயமான பள்ளம் மேடுகளை தன்னுள் கொண்டவள்)


மலை அடிவாரத்திற்கு நாங்கள் சென்ற போது, மதியம் கடந்திருந்தது. அதனால திட்டமிட்டப்படி அன்றே மலையேற முடியவில்லை. மலை அடிவாரத்திலேயே தங்குவதற்கு அறைகள் நிறைய இருந்தது. மற்றைய இடங்களை விட மலிவாகவே இருந்தது. அதே நேரம் விடுதியில் உணவின்  விலை சற்றே அதிகமாகவே இருந்தது.
பதிவு நீண்டு விட்டதால்...மீதி பாகம்-2 ல்

No comments: