Monday 11 January 2021

சங்க இலக்கிய பாடல் - குறுந்தொகை பாடல் -2

 திருமதி.வைதேகி ஹெர்பர்ட் அவர்களின், சங்க இலக்கிய வகுப்பில் கற்றவற்றை ஒரு தொகுப்பாக  உங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிமுகத்திற்கு  பகுதி -1 ஐ  படிக்கவும்.

 

குறுந்தொகை பாடல் 


 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

கொங்கு= பூவின் தாது (மகரந்தம்); தேர்=தேர்ந்தெடுக்கும்; வாழ்க்கை=வாழும்

அஞ்சிறைத்தும்பி=  (அகம் + சிறை) உள்ளே சிறகுகளை உடைய வண்டே, அல்லது (அம்+சிறை) -அழகிய சிறகுககளையுடைய வண்ணத்து பூச்சிக்கும் இது பொருந்தும்.

காமம் செப்பாது கண்டது மொழிமோ

காமம் செப்பாது -நான் விரும்பியதைச் சொல்லாமல்; கண்டது மொழிமோ-நீ கண்டறிந்ததைக் கூறு

காண் +அம் =காமம் = விருப்பம் என்று தான் பொருள் (சமஸ்கிருதத்தில் பாலியல் தூண்டலுக்கு காமம் என்றுள்ளது)

செப்பு = சொல்  (தெலுங்கில் இன்றளவும் இச்சொல் பயன்பாட்டில் உள்ளது)

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

பயலியது - தொடர்ந்து, ஏழு பிறவியும்; கெழீய நட்பின் - பொருந்திய  நட்புடன் விளங்கும்; மயிலியல்-மயில் போன்ற

செறியெயிற் றரிவை கூந்தலின்

செறி எயிறு= நெருங்கிய பற்களையுடைய; அரிவை = பெண்; கூந்தலின்-கூந்தலை விட

நறியவும் உளவோ நீயறியும் பூவே -

நறியவும்= மணமிகுந்தது;  உளவோ= ஏதேனும் உள்ளதோ; நீ அறியும் பூவே = நீ அறிந்த பூக்களிடம்

 - இயற்றியவர் இறையனார்


பொருளுரை:-

மலர்களில் மகரந்தங்களை தேர்ந்து எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய வண்ணத்து பூச்சியே/வண்டே!

நீ அறிந்த பூக்களில், என்னுடன் (எழுமையும்) பல பிறப்புகளிலும் பொருந்திய நட்புடன் பழகும் (தலைவியை சொல்கிறார்), மயில் போல் அழகுடைய, நெருக்கமான அழகிய பற்களை உடைய பெண்ணின்(தலைவியின்)  கூந்தலைவிட, மணமுடையது ஏதேனும் உள்ளதோ?

எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.... நீ கற்றறிந்ததைக் கூறு!

 

கொசுறு:-பின்னர் இப்பாடல், திருவிளையாடல் புராணத்திலும் இணைக்கப்பட்டுள்ளது (தருமி கதை).

எனக்கு என்னமோ heavy யா தலைவியிடம் மாட்டிக்கொண்ட தலைவன்  தலைவியை சமாளிப்பதற்க்காக.

வண்ணத்து பூச்சியிடம் சொல்வதை போல் தலைவியை கவரும் வகையில் தீட்டிய பாடலாகவே உணர்கிறேன்.

நம் ராஜா தந்திரங்கள் அனைத்தையும் நமக்கு முன்பே எவரோ  (இறையனார்) அறிந்து வைத்திருக்கிறார்  .

 

No comments: