Monday, 19 September 2022

மாற வேண்டியது பெற்றோர்களே பிள்ளைகள் அல்ல!

சில தினங்களுக்கு முன்பு தமிழ் பள்ளி சார்பாக நடத்தப்படும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள பிள்ளைகளுடன் சென்றுருந்தேன்.

விளையாட்டு போட்டி மிக
ச் சிறப்பாக நடைபெற்றது. போட்டிகள் அனைத்தும் ஒரே இடத்தில அல்லாமல்  பல்வேறு பிரிவுகளாக பிரித்து தனித்தனியே நடைபெற்றது. பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மிகுந்த ஆர்வத்தோடும் போட்டியில் பங்கு பெற்றனர்.


பார்வையாளர் பகுதியில் இருந்ததால் மகன்கள் இருவரும் மகிழ்ச்சியாக விளையாடியதை பார்க்க முடுந்தது. ஆனால் வென்றார்களா என மிகச்சரியாக அறிய முடியவில்லை. (நான்காவது இடமா இல்லை  மூன்றாவதா என துல்லியமாக தெரியவில்லை.)

மூத்த மகன் இரு போட்டிகளில் வென்றிருந்தார்.  
இடைவெளியின் போது இளைய மகனிடம் எத்தனை போட்டியில் வென்றிருக்கிறாய் என்று கேட்டேன்.


கேட்டதுதான் தாமதம் அவரிடம் இருந்த மகிழ்ச்சியை காணும்... தவறாக கேட்டுட்டோமோ என்று  எண்ணுவதற்குள் விளையாடியிருக்கிறேன், கிடைக்கலாம்...! என்று சிரித்துவிட்டு ஓடிட்டாரு...
😊 (நான்காவது இடத்தைத் பிடித்திருந்தார் அதனால் சொல்ல மனமில்லாமல் சென்று விட்டார்)


அதன் பின் நடந்த பார்வையாளருக்கான ஓட்டப்பந்தயத்தில் நான் கலந்துகொண்டேன்.
தகுதி சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்தேன். இறுதிச்சுற்றில் 4வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. (மொத்தமே 7 பேருக்கு தான் போட்டி  அதில் ஒருவர் வழியிலேயே நின்றுவிட்டார்)

எங்க தவற விட்டோம் என யோசிக்கிறேன் "குறுகிய தூர ஒட்டப்பந்தயத்தை பொறுத்தவரை ஆரம்ப இடத்தில்  உங்களுடைய சின்ன தாமதமும் வெற்றி வாய்ப்பை பறிக்கும்" கொஞ்சம் கவனமா இருத்திருக்கணுமோ என்று எண்ணியபடி நடக்கிறேன்.

என் இளைய மகன் என் அருகே வந்து "அப்பா நீங்க இரண்டு பேரை ஜெயிச்சிருக்கீங்க" என்று சொன்னார் ஆனந்தமாக.

ஒரு பக்கம் மகிழ்ச்சி, அதே நேரம் எனது தவறை உணர்ந்து... டேய் குட்டிமா நீங்க நான்கு  பேரை ஜெயிச்சிருக்கீங்க. அப்பாவ  விட நீங்க தான் சிறப்பு என்றேன் சிரித்துக்கொண்டே


அதன் பின் நடந்த போட்டியில் அவர் ஒரு பரிசையும் வென்றார்.


- சூழ்நிலை ஒன்றுதான் ஆனால் குழந்தைகள் பார்க்கும் கோணம் எப்போதும் நேர்மறையாகத்தான் இருக்கும்.

 கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி நான் அவரிடம் கேட்ட கேள்வியும் என் மகன் என்னிடம் பகிர்ந்த செய்தியும், மாற வேண்டியது பெற்றோர் தான் என்பதை தெளிவாக எனக்கு உணர்த்தியது.

பல விசயங்களை நன்கு அறிந்து/கடந்து வந்திருந்தாலும் பல நேரங்களில் மகிழ்ச்சியை தாண்டி, வெற்றி தான் முக்கியம் என்பதை குழந்தைகளிடம் திணிக்கிறோம். அது முற்றிலும் தவறானதே!!

No comments: