Sunday, 29 December 2024

எண்ணெய் எடுக்கும் கப்பலில் சில நாள்கள்

  

கிட்டதட்ட 17 வருடம் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய நிறுவனப் பணியில் இருந்தாலும் இப்பொழுது தான் வாய்ப்பு கிட்டியது, எண்ணெய் எடுக்கும்  கப்பலில் பணிபுரிய...

என் மனைவியும் ஒரு படத்துல கவுண்டமணிக்கு, அவரது மனைவி வீரத் திலகமிட்டு  புலி வேட்டையாட அனுப்பி வைப்பார்களே அது மாதிரி வெற்றியோடு திரும்புங்கள் என வழியனுப்புவார் என நினைத்திருந்தேன்.

பத்து நிமிடத்தில் கிளம்பினாத்  தான், பேருந்தை புடிச்சு விமான நிலையத்திற்கு  சரியா போய் சேர முடியும்.... ஆனால் நானோ அப்பொழுது தான் அலுவலகத்தில் இருந்தே கிளம்பினேன்.... இதற்கிடையில் என் அன்பு மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "நீங்க ஒழுங்காவே பையில் துணியை  அடுக்குல நான் வேணா நீங்க அடுக்கின துணி எல்லாத்தையும்  அந்த  (trolley bag) சக்கரம் இருக்குற பெட்டியில் சிறப்பாக அடுக்கி வச்சுடுவா" அப்படின்னு....

நான் என்ன சுற்றி  பார்க்கவா போறேன்.

அதீத அன்பும் சில நேரங்களில் பயங்கர காண்டாகத் தான் இருக்கும்.

இந்த மாதிரி பணிகளிலெல்லாம் உடைமைகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது,  உயிர் தான் முக்கியம் அதனால எந்த நேரமும் பாதுகாப்பு உபகரணங்களை அருகில்  வைத்துக் கொண்டே தான் திரிய வேண்டும்.

எந்த நேரத்திலும் எந்த சம்பவமும் நடக்கலாம் என்பதால் உடமைகளை கீழே போட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் அதிகம்....
ஆபத்து அதிகம் இருப்பதால்தான், சலுகைகளும் சம்பளமும் சற்று அதிகம் இம்மாதிரியான பணிகளுக்கு.

மேலும் நாம் செல்ல வேண்டிய கப்பலுக்கு பெரும்பாலும் உலங்கூர்தி (helicopter) மூலமே கொண்டு செல்வார்கள்.
உலங்கூர்தி (helicopter) பயணத்தில், நாம் அதிகபட்சம் இரண்டு பெட்டிகளை எடுத்துச் செல்ல முடியும் தலா பதினோரு கிலோவுக்கு மிகாமல். இதில சக்கரம் இருக்கும்  பெட்டி எல்லாம் எடுத்துட்டு போனோம்னா!, பெட்டி மட்டுமே அஞ்சு கிலோவிற்கு குறையாமல் இருக்கும். ஆக நாம எடுத்து சொல்ல வேண்டிய முதன்மையான பொருட்களை எடுத்து செல்வது சற்று கடினமே
அதனால பெரும்பாலும் துணிப் பைகளையே அநேகர் கொண்டு வருவார்கள்.

ஒரு வழியாக பேர்கென் விமான  நிலையம் சென்று அங்கிருந்து அபர்டினுக்கு  (5.50-7.50)  இரவு 8.30 சென்றடைந்தேன்.
என்னுடைய சக ஊழியர்கள் நகரின் மையதிற்கு சென்று நாம் உணவருந்தி விட்டு வரலாமே என்றார்கள்... அதுவும் சரியென பட்டதால் ஒரு வாடகை மகிழ்வுந்தை அமர்த்தி நகரின்  மையத்திற்கு சென்றோம் ஒன்பது மணிக்கு எல்லாம் மொத்த கடைகளும், வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன வெறும்  24 * 7 கடைகள் மட்டுமே திறந்து இருந்தன அதுவும் மிகவும் சொற்பம். அப்புறம் கேளிக்கை விடுதிகள்(இசை மற்றும் மது ) நிறைய திறந்து இருந்தது....
 அடுத்த நாள் 5.45க்கு நாங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய உலங்கூர்தி (helicopter) புறப்படும்  தளத்திற்கு செல்ல  வேண்டி இருந்ததால், உணவருந்தி விட்ட உடனே hotel க்கு  திரும்பி விட்டோம்.
 


பேருகெனிலிருந்து அபர்டின் 1 மணி நேர விமானப் பயணம். அபர்டினிலிருந்து பணி மேற்கொள்ள வேண்டிய என்னை எடுக்கும்  கப்பல் 225 km வடக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது. முதல் முறை  உலங்கூர்தி (helicopter) பயணம்..! தரையில் இருந்து உலங்கூர்தி மேலே புறப்படும்போது பெரிதாக வியப்பாகவோ/ சிலிர்ப்பாகவோ இல்லை....  அதே நேரம் கடலில் இறங்கும்போது சற்று கலவரம் தான்... பொதுவாக எண்ணெய் எடுக்கும் கப்பல்கள்  கடலில்  நங்கூரம் மற்றும் azimuth thruster மூலம் கப்பலை  நிலை நிறுத்தி வைத்து இருப்பார்கள்.  இருப்பினும் கடல் அலை காரணமாக ஆடிக் கொண்டு தான் இருக்கும்.  100% கப்பலை ஆடாம நிப்பாட்ட முடியாது. அதன் மேலே வந்து உலங்கூர்தி (helicopter) இறங்கணும்னா ரொம்ப கவனம் தேவை. முதல் முறை இறங்கும்போது நிறைய மேகமூட்டமாக   இருந்ததுனால இறங்குறது சாத்தியமில்லை என்று திரும்பி எங்க ஏற்றினார்களோ  அந்த இடத்துக்கே வந்து நின்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணம். போறதுக்கு ஒரு மணி நேரமும் இறங்க முடியாத காரணத்தால் திரும்பி வர  ஒரு மணி நேரம்  ஆனது.
 

வானிலையை பொறுத்து அடுத்து பயணத்தை முடிவு செய்து அறிவிப்பதாக சொன்னார்கள்.... அதன்படி ஆறு மணி நேரம் இடைவெளிக்கு பிறகு திரும்பவும் பயணம் மேற்கொண்டோம் இந்த முறை  சரியாக கப்பலில்  இறங்குவதற்கு வசதியாக இருந்தது.
இறங்கி உள்ள போனா வழக்கமா நடைபெற்ற பாதுகாப்புக் induction.. அது முடிஞ்சதும், நாங்கள் பணி மேற்கொள்ள வேண்டிய உபகரணங்களின் தற்போதைய நிலையை மேற்பார்வையிட்டு நாங்கள் தங்க வேண்டிய கப்பலுக்கு போகத்தயாரானோம்.


பொதுவாக எண்ணெய் எடுக்கும் கப்பலில்..மிக முக்கியமான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் தங்குவதில்லை... ஏனையர்  அனைவரும் தங்கும் வசதி கொண்ட மற்றொரு கப்பலில் பணி முடிந்ததும் மாறி விடுவார்கள்...அந்தக் கப்பல் 500மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்..
அது தவிர்த்து பாதுகாப்பு பணிக்காக மற்றொரு கப்பலும் 1000 மீட்டர் தொலைவில் மற்றொரு பக்கத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் அவர்களது பணி 24/7 கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.

இந்த ஏற்பாடு அதிக பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் உடனே பாதுகாக்கும் பணியை தொடங்குவதற்கும் ஏதுவாக இருக்கும்.

பல வருடங்களாக அலுவலகத்தில் கணினியின் முன் உட்கார்ந்த படியே பணி செய்துவிட்டு திடீரென கப்பலின் பல அடுக்கு தளங்களில் முதுகில் தேவையான உபகரணங்கள் கொண்ட பையை  ஏற்றிக் கொண்டு மேலும் கீழும் இறங்கி வேலை செய்வது, புதிய அனுபவமாக இருந்தாலும் சற்று கடினமாகவே இருந்தது.
முதல் நாள் மனம் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை நல்ல வேலை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்த உடற்பயிற்சி கை கொடுத்தது...உடல் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதிக சிரமங்கள் இல்லாமல், உடனே என்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது.






No comments: