நான் நலமாகத் தான் இருக்கிறேன்
சிறு காயமோ, இரத்தமோ கூட வருவதில்லை
ஆனாலும் ஒவ்வொரு நொடியும் உயிர் பிரியும் வலி..
ஒரு நடமாடும் பிணம் போன்ற வாழ்க்கை..
அளவுக்கு அதிகமாக என் மீது, நீ வைத்த காதல் தான் இதற்கெல்லாம் காரணம் என அறிவாயா.....
எனது மனைவியின் நாள் குறிப்பை கண்டதும் தான், அவள் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதை அறிந்தேன். சிக்கலான செய்திகளையும் மிக இயல்பாக எளிமையாக எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதை அறிவேன். ஆனால் அவரது எழுத்து நடை எனக்கு வெகு தாமதமாகத்தான் தெரியவந்தது.
அவரது நாள் குறிப்பில், இருந்து அவரைப் பற்றி எடுத்துச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
இது தனிமனித துதி பாடல் போல் இருக்காது. ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நேர்த்தியாக, அறத்தோடு எதிர்கொண்ட ஒரு சாமானிய பெண்மணியின் வாழ்க்கை பாடமே.
இதனை படிப்பவர்கள் தம் மனங்களில், தன்னம்பிக்கையும் மற்றும் மனப்பக்குவத்தையும் நிச்சயம் விதைக்கும் என்ற நம்பிக்கையே இம்முயற்சி.
குறிப்பன்குளம் என்கின்ற சிற்றூரில் சக்திவேல் மற்றும் தேவகி என்கின்ற விவசாய தம்பதிகளுக்கு மகளாய் பிறந்து, தன் பெற்றோர்களின் பொருளாதார சூழல் உணர்ந்து, வேலை பாதி, படிப்பு மீது என்று இருந்து, உயர்நிலை பட்டப் படிப்பு வரை படித்த ஒரு சாமானிய மனுசி தான் என்னவள்.
அதனால்தான் என்னவோ பேராசையோ, பொறாமை என்பதோ, சுத்தமாய் அவரிடம் கிடையாது. இயல்பான விசயங்களுக்கே பெருமகிழ்ச்சி கொள்ளும் ஓர் எளிய கிராமத்து பெண்மணி.
அங்கிருந்து வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தவர் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். முடிந்தவரை குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதாலோ என்னவோ, கல்யாணம் பற்றி சிந்திக்கவே இல்லை 26 வயது வரை.
அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கே இல்லையென்றால் எனக்கு கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா...
வெகுளித்தனமான பேச்சு, மனதில் உள்ளதை அப்படியே பேசும் குணம் கொண்டவள், அதனால் பல சிக்கல்களும், பல நல்ல மனிதர்களின் நட்பும் நிறையவே பெற்றிருந்தாள்.
தனிமனிதராக, அடுத்தவர்களின் விமர்சனங்களில் நல்லவற்றையா? (அல்லது) தீயவற்றையா? எதை மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதை, தான்தான் முடிவு செய்வார்.
அதனால் எங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு வருவதில்லை.
அதுவே பொதுப் பிரச்சனை என்றால் , தற்குறித்தனமாக பேசுபவர்களையும், வாய்மை என்றால் என்னவென்றே தெரியாமல் மாற்றி மாற்றி பேசிபவர்களது போலித்தனத்தையும், நேரடியாகவே சுட்டிக்காட்டுவார்.
அவர்கள், தங்களை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் அவர்களிடமிருந்து விலகிக் கொள்வார்.
வாழ்க்கை, மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமே தவிர, மானங்கெட்ட மனிதர்களும் நம்மை போற்றும் படி, அவர்களுக்கு ஏற்றார் போல் பல்லிளித்து வாழ்வது வாழ்க்கையே அல்ல, என்பதை தெளிவாக உணர்ந்தவர்.
இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நம்மவர்களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான வாழ்க்கையைத் தான் பின்பற்றுகிறார்கள். என்பதால், என்னவளும் உங்களில் ஒருவர்தான். என்பதை உரைப்பதற்கே இந்த முன்னுரை.
இனி அவள் என் வாழ்வில் வந்தது தொட்டு அவளது பயணத்தை விவரிக்கிறேன்.
அது ஒரு ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன். இனி காதல் வாழ்க்கைக்கு வழியில்லை என்ற நிலையில், எனது பெற்றோர், எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருந்த சமயம்.
என்னவளின் புகைப்படம் கொடுத்து, இவளை பெண் பார்க்கச் செல்லவிருக்கிறோம். என்றார்கள் எனது பெற்றோர்.
எனது கற்பனைக்கும் எட்டாத வகையில் பேரழகியாக இருந்தால் என்னவள்.
அதனால, எனக்கு பிடிக்கிறது இருக்கட்டும், முதல்ல அந்த பெண்ணுக்கு என்ன புடிச்சிருக்கா? என்று கேட்டுவிட்டு அதுக்கப்புறம் போகலாமே. என்று சொன்னேன்.
காரணம், தோற்றத்தில் வெகு சுமாராக இருந்தவர்களே, மாப்பிள்ளை கருப்பு என்று நிராகரித்த சமயமது.
எனது பெற்றோரோ, பெண்ணை கோயில்ல வச்சு தான், பார்க்க போறோம். புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்றார்கள்.
எனது நண்பர் கொடுத்த இயோசனைப்படி முதல் முறையாக ஜீன்ஸ் கால் சட்டையுடன் பெண் பார்க்க சென்றேன். கொஞ்சம் நவீனமாக இருக்கும், என்று நினைத்து செய்த செயல் வினையாக முடிந்தது.
அந்த கால் சட்டையின் இறுக்கத்தின் காரணமாக, நடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதை கண்ட எனது மாமனார், எனக்கு காலில் எதுவும் குறை உள்ளதோ என நினைத்துக் கொண்டார்.
என்னவளின் உறவினர்களோ, ஓர் அடியாள் தேர்வு செய்வது போல கேள்விகளை முன் வைத்தார்கள்.
இறுதியாக என்னவளிடம் பேசுவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் படிப்பை பற்றி ஆரம்பித்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை மிரட்டும் தோணியிலேயே பதில் வந்தது.
சுதாரித்துக் கொண்டு சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் பெரிதாக எடுபடவில்லை. படுத்தே விட்டானையா என்று இறங்கியபோதுதான் கொஞ்சம் சிரிப்பை பார்க்க முடிந்தது.
எந்த அழுத்தமோ/ வற்புறுத்தலோ இல்லாமல், உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என்று கேட்டேன். தலை அசைத்துச் சென்றாள்.
சுற்றமும் குடும்பத்தாரும் அனைவருக்கும், விருப்பம் என்றும், நிச்சயதார்த்தத்தை கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் பேசிச் சென்றார்கள். ஒரு மனிதரை தவிர்த்து அவர் எனது மாமனார்.
தொடர்கிறேன்...
No comments:
Post a Comment