Tuesday, 7 October 2025

காதலும் கடவுளும் - என் மனைவியின் சுயசரிதை (அவரது நாள் குறிப்பிலிருந்து )

நான் நலமாகத் தான் இருக்கிறேன்
சிறு காயமோ, இரத்தமோ கூட வருவதில்லை 
ஆனாலும் ஒவ்வொரு நொடியும் உயிர் பிரியும் வலி.. 
ஒரு நடமாடும் பிணம் போன்ற வாழ்க்கை..

அளவுக்கு அதிகமாக என் மீது, நீ வைத்த காதல் தான் இதற்கெல்லாம் காரணம் என அறிவாயா.....



எனது மனைவியின் நாள் குறிப்பை கண்டதும் தான், அவள் மிகப்பெரிய எழுத்தாளர் என்பதை அறிந்தேன். சிக்கலான செய்திகளையும் மிக இயல்பாக எளிமையாக எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதை அறிவேன். ஆனால் அவரது எழுத்து நடை எனக்கு வெகு தாமதமாகத்தான் தெரியவந்தது.
 
 
அவரது நாள் குறிப்பில், இருந்து அவரைப் பற்றி எடுத்துச் சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.
 
 
 இது தனிமனித துதி பாடல் போல் இருக்காது. ஒவ்வொரு சூழலையும் எவ்வளவு நேர்த்தியாக,  அறத்தோடு எதிர்கொண்ட ஒரு சாமானிய பெண்மணியின் வாழ்க்கை பாடமே.
 
இதனை படிப்பவர்கள் தம்  மனங்களில், தன்னம்பிக்கையும்  மற்றும் மனப்பக்குவத்தையும்  நிச்சயம் விதைக்கும்  என்ற நம்பிக்கையே இம்முயற்சி.


குறிப்பன்குளம் என்கின்ற சிற்றூரில் சக்திவேல் மற்றும் தேவகி என்கின்ற விவசாய தம்பதிகளுக்கு மகளாய் பிறந்து, தன் பெற்றோர்களின் பொருளாதார சூழல் உணர்ந்து, வேலை பாதி, படிப்பு மீது என்று இருந்து, உயர்நிலை பட்டப் படிப்பு வரை படித்த ஒரு சாமானிய மனுசி  தான் என்னவள்.
 
 


அதனால்தான் என்னவோ பேராசையோ, பொறாமை என்பதோ, சுத்தமாய் அவரிடம் கிடையாது. இயல்பான விசயங்களுக்கே பெருமகிழ்ச்சி கொள்ளும் ஓர் எளிய கிராமத்து பெண்மணி.
 
 
அங்கிருந்து வேலை நிமித்தம் சென்னைக்கு வந்தவர் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். முடிந்தவரை குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதாலோ என்னவோ, கல்யாணம் பற்றி சிந்திக்கவே இல்லை 26 வயது வரை. 
அதுவும் ஒரு வகையில் நல்லதுக்கே இல்லையென்றால் எனக்கு கிடைத்திருக்க மாட்டாள் அல்லவா...
 

 
வெகுளித்தனமான பேச்சு, மனதில் உள்ளதை அப்படியே பேசும் குணம் கொண்டவள், அதனால் பல சிக்கல்களும், பல நல்ல மனிதர்களின் நட்பும் நிறையவே பெற்றிருந்தாள்.


தனிமனிதராக, அடுத்தவர்களின் விமர்சனங்களில் நல்லவற்றையா? (அல்லது) தீயவற்றையா? எதை மனதில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதை, தான்தான் முடிவு செய்வார். 
அதனால் எங்கள் வாழ்வில் எந்த பிரச்சனைகளையும் எடுத்துக் கொண்டு வருவதில்லை.


அதுவே பொதுப் பிரச்சனை என்றால் , தற்குறித்தனமாக பேசுபவர்களையும், வாய்மை என்றால் என்னவென்றே தெரியாமல் மாற்றி மாற்றி பேசிபவர்களது போலித்தனத்தையும், நேரடியாகவே சுட்டிக்காட்டுவார். 
அவர்கள், தங்களை மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் அவர்களிடமிருந்து விலகிக் கொள்வார்.
 
 
வாழ்க்கை, மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமே தவிர, மானங்கெட்ட மனிதர்களும் நம்மை போற்றும் படி, அவர்களுக்கு ஏற்றார் போல் பல்லிளித்து வாழ்வது வாழ்க்கையே அல்ல, என்பதை தெளிவாக உணர்ந்தவர்.


இதையெல்லாம் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நம்மவர்களில் பெரும்பாலோர் இந்த மாதிரியான வாழ்க்கையைத் தான் பின்பற்றுகிறார்கள். என்பதால், என்னவளும் உங்களில் ஒருவர்தான். என்பதை உரைப்பதற்கே இந்த முன்னுரை. 
 

இனி அவள் என் வாழ்வில் வந்தது தொட்டு அவளது பயணத்தை விவரிக்கிறேன்.


அது ஒரு ஆகஸ்ட் மாதம் என நினைக்கிறேன். இனி காதல் வாழ்க்கைக்கு வழியில்லை என்ற நிலையில், எனது பெற்றோர், எனக்காக பெண் பார்த்துக் கொண்டிருந்த சமயம்.
 

என்னவளின் புகைப்படம் கொடுத்து, இவளை பெண் பார்க்கச் செல்லவிருக்கிறோம். என்றார்கள் எனது பெற்றோர்.
 
 
எனது கற்பனைக்கும் எட்டாத வகையில் பேரழகியாக இருந்தால் என்னவள்.
அதனால, எனக்கு பிடிக்கிறது இருக்கட்டும், முதல்ல அந்த பெண்ணுக்கு என்ன புடிச்சிருக்கா? என்று கேட்டுவிட்டு அதுக்கப்புறம் போகலாமே. என்று சொன்னேன்.
 
 
காரணம், தோற்றத்தில் வெகு சுமாராக இருந்தவர்களே, மாப்பிள்ளை கருப்பு என்று நிராகரித்த சமயமது.


எனது பெற்றோரோ, பெண்ணை கோயில்ல வச்சு தான், பார்க்க போறோம். புடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்றார்கள்.


எனது நண்பர் கொடுத்த இயோசனைப்படி முதல் முறையாக ஜீன்ஸ் கால் சட்டையுடன் பெண் பார்க்க சென்றேன். கொஞ்சம் நவீனமாக இருக்கும், என்று நினைத்து செய்த செயல் வினையாக முடிந்தது.
 
 
அந்த கால் சட்டையின் இறுக்கத்தின் காரணமாக, நடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அதை கண்ட எனது மாமனார், எனக்கு காலில் எதுவும் குறை உள்ளதோ என நினைத்துக் கொண்டார். 


என்னவளின் உறவினர்களோ, ஓர் அடியாள் தேர்வு செய்வது போல கேள்விகளை முன் வைத்தார்கள்.


இறுதியாக என்னவளிடம் பேசுவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். என்ன பேசுவது என்று தெரியாமல் படிப்பை பற்றி ஆரம்பித்தேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை மிரட்டும் தோணியிலேயே பதில் வந்தது.
 
 
சுதாரித்துக் கொண்டு சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகள் பெரிதாக எடுபடவில்லை. படுத்தே விட்டானையா என்று இறங்கியபோதுதான் கொஞ்சம் சிரிப்பை பார்க்க முடிந்தது. 
 
 
எந்த அழுத்தமோ/ வற்புறுத்தலோ இல்லாமல், உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? என்று கேட்டேன். தலை அசைத்துச் சென்றாள்.


சுற்றமும் குடும்பத்தாரும் அனைவருக்கும், விருப்பம் என்றும், நிச்சயதார்த்தத்தை கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் பேசிச் சென்றார்கள். ஒரு மனிதரை தவிர்த்து அவர் எனது மாமனார்.

தொடர்கிறேன்...

Sunday, 29 December 2024

எண்ணெய் எடுக்கும் கப்பலில் சில நாள்கள்

  

கிட்டதட்ட 17 வருடம் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்புடைய நிறுவனப் பணியில் இருந்தாலும் இப்பொழுது தான் வாய்ப்பு கிட்டியது, எண்ணெய் எடுக்கும்  கப்பலில் பணிபுரிய...

என் மனைவியும் ஒரு படத்துல கவுண்டமணிக்கு, அவரது மனைவி வீரத் திலகமிட்டு  புலி வேட்டையாட அனுப்பி வைப்பார்களே அது மாதிரி வெற்றியோடு திரும்புங்கள் என வழியனுப்புவார் என நினைத்திருந்தேன்.

பத்து நிமிடத்தில் கிளம்பினாத்  தான், பேருந்தை புடிச்சு விமான நிலையத்திற்கு  சரியா போய் சேர முடியும்.... ஆனால் நானோ அப்பொழுது தான் அலுவலகத்தில் இருந்தே கிளம்பினேன்.... இதற்கிடையில் என் அன்பு மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "நீங்க ஒழுங்காவே பையில் துணியை  அடுக்குல நான் வேணா நீங்க அடுக்கின துணி எல்லாத்தையும்  அந்த  (trolley bag) சக்கரம் இருக்குற பெட்டியில் சிறப்பாக அடுக்கி வச்சுடுவா" அப்படின்னு....

நான் என்ன சுற்றி  பார்க்கவா போறேன்.

அதீத அன்பும் சில நேரங்களில் பயங்கர காண்டாகத் தான் இருக்கும்.

இந்த மாதிரி பணிகளிலெல்லாம் உடைமைகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது,  உயிர் தான் முக்கியம் அதனால எந்த நேரமும் பாதுகாப்பு உபகரணங்களை அருகில்  வைத்துக் கொண்டே தான் திரிய வேண்டும்.

எந்த நேரத்திலும் எந்த சம்பவமும் நடக்கலாம் என்பதால் உடமைகளை கீழே போட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழல் அதிகம்....
ஆபத்து அதிகம் இருப்பதால்தான், சலுகைகளும் சம்பளமும் சற்று அதிகம் இம்மாதிரியான பணிகளுக்கு.

மேலும் நாம் செல்ல வேண்டிய கப்பலுக்கு பெரும்பாலும் உலங்கூர்தி (helicopter) மூலமே கொண்டு செல்வார்கள்.
உலங்கூர்தி (helicopter) பயணத்தில், நாம் அதிகபட்சம் இரண்டு பெட்டிகளை எடுத்துச் செல்ல முடியும் தலா பதினோரு கிலோவுக்கு மிகாமல். இதில சக்கரம் இருக்கும்  பெட்டி எல்லாம் எடுத்துட்டு போனோம்னா!, பெட்டி மட்டுமே அஞ்சு கிலோவிற்கு குறையாமல் இருக்கும். ஆக நாம எடுத்து சொல்ல வேண்டிய முதன்மையான பொருட்களை எடுத்து செல்வது சற்று கடினமே
அதனால பெரும்பாலும் துணிப் பைகளையே அநேகர் கொண்டு வருவார்கள்.

ஒரு வழியாக பேர்கென் விமான  நிலையம் சென்று அங்கிருந்து அபர்டினுக்கு  (5.50-7.50)  இரவு 8.30 சென்றடைந்தேன்.
என்னுடைய சக ஊழியர்கள் நகரின் மையதிற்கு சென்று நாம் உணவருந்தி விட்டு வரலாமே என்றார்கள்... அதுவும் சரியென பட்டதால் ஒரு வாடகை மகிழ்வுந்தை அமர்த்தி நகரின்  மையத்திற்கு சென்றோம் ஒன்பது மணிக்கு எல்லாம் மொத்த கடைகளும், வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன வெறும்  24 * 7 கடைகள் மட்டுமே திறந்து இருந்தன அதுவும் மிகவும் சொற்பம். அப்புறம் கேளிக்கை விடுதிகள்(இசை மற்றும் மது ) நிறைய திறந்து இருந்தது....
 அடுத்த நாள் 5.45க்கு நாங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டிய உலங்கூர்தி (helicopter) புறப்படும்  தளத்திற்கு செல்ல  வேண்டி இருந்ததால், உணவருந்தி விட்ட உடனே hotel க்கு  திரும்பி விட்டோம்.
 


பேருகெனிலிருந்து அபர்டின் 1 மணி நேர விமானப் பயணம். அபர்டினிலிருந்து பணி மேற்கொள்ள வேண்டிய என்னை எடுக்கும்  கப்பல் 225 km வடக்கு மேற்கு திசையில் அமைந்துள்ளது. முதல் முறை  உலங்கூர்தி (helicopter) பயணம்..! தரையில் இருந்து உலங்கூர்தி மேலே புறப்படும்போது பெரிதாக வியப்பாகவோ/ சிலிர்ப்பாகவோ இல்லை....  அதே நேரம் கடலில் இறங்கும்போது சற்று கலவரம் தான்... பொதுவாக எண்ணெய் எடுக்கும் கப்பல்கள்  கடலில்  நங்கூரம் மற்றும் azimuth thruster மூலம் கப்பலை  நிலை நிறுத்தி வைத்து இருப்பார்கள்.  இருப்பினும் கடல் அலை காரணமாக ஆடிக் கொண்டு தான் இருக்கும்.  100% கப்பலை ஆடாம நிப்பாட்ட முடியாது. அதன் மேலே வந்து உலங்கூர்தி (helicopter) இறங்கணும்னா ரொம்ப கவனம் தேவை. முதல் முறை இறங்கும்போது நிறைய மேகமூட்டமாக   இருந்ததுனால இறங்குறது சாத்தியமில்லை என்று திரும்பி எங்க ஏற்றினார்களோ  அந்த இடத்துக்கே வந்து நின்றோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பயணம். போறதுக்கு ஒரு மணி நேரமும் இறங்க முடியாத காரணத்தால் திரும்பி வர  ஒரு மணி நேரம்  ஆனது.
 

வானிலையை பொறுத்து அடுத்து பயணத்தை முடிவு செய்து அறிவிப்பதாக சொன்னார்கள்.... அதன்படி ஆறு மணி நேரம் இடைவெளிக்கு பிறகு திரும்பவும் பயணம் மேற்கொண்டோம் இந்த முறை  சரியாக கப்பலில்  இறங்குவதற்கு வசதியாக இருந்தது.
இறங்கி உள்ள போனா வழக்கமா நடைபெற்ற பாதுகாப்புக் induction.. அது முடிஞ்சதும், நாங்கள் பணி மேற்கொள்ள வேண்டிய உபகரணங்களின் தற்போதைய நிலையை மேற்பார்வையிட்டு நாங்கள் தங்க வேண்டிய கப்பலுக்கு போகத்தயாரானோம்.


பொதுவாக எண்ணெய் எடுக்கும் கப்பலில்..மிக முக்கியமான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் தங்குவதில்லை... ஏனையர்  அனைவரும் தங்கும் வசதி கொண்ட மற்றொரு கப்பலில் பணி முடிந்ததும் மாறி விடுவார்கள்...அந்தக் கப்பல் 500மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்..
அது தவிர்த்து பாதுகாப்பு பணிக்காக மற்றொரு கப்பலும் 1000 மீட்டர் தொலைவில் மற்றொரு பக்கத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் அவர்களது பணி 24/7 கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.

இந்த ஏற்பாடு அதிக பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் உடனே பாதுகாக்கும் பணியை தொடங்குவதற்கும் ஏதுவாக இருக்கும்.

பல வருடங்களாக அலுவலகத்தில் கணினியின் முன் உட்கார்ந்த படியே பணி செய்துவிட்டு திடீரென கப்பலின் பல அடுக்கு தளங்களில் முதுகில் தேவையான உபகரணங்கள் கொண்ட பையை  ஏற்றிக் கொண்டு மேலும் கீழும் இறங்கி வேலை செய்வது, புதிய அனுபவமாக இருந்தாலும் சற்று கடினமாகவே இருந்தது.
முதல் நாள் மனம் பெரிதாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை நல்ல வேலை தினமும் சில நிமிடங்கள் செய்து வந்த உடற்பயிற்சி கை கொடுத்தது...உடல் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதிக சிரமங்கள் இல்லாமல், உடனே என்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது.






Friday, 24 May 2024

திரும்பிப் பார்க்கிறேன் - பிறந்த நாள் வாழ்த்து.

என் நட்பு வட்டத்தில் யாருக்காவது பிறந்த நாள் என்றால், 
எல்லாரும் அவனுக்கு வரிசை கட்டி வாழ்த்து சொல்லுவோம்,
அப்புறம் அவனை வற்புறுத்தி விருந்து (Party) வைக்க சொல்லுவோம், விருந்தெல்லாம் முடிந்த பிறகு.

மச்சி ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே...

ஆமா நீ என்ன பெருசா சாதிச்சிட்டேன்னு பிறந்த நாள் கொண்டாடுற...??

இல்ல.. இன்னும் நீ சின்ன குழந்தையாட...?? (அதான் எழு கழுதை வயசாகுதில்ல)

அப்புறம் ஏன் உனக்கு இது...? அப்புடின்னு அவனை கோமாளியாக்கி சிரித்த நாட்கள் பலவுண்டு.. முன்பு.

இப்போவெல்லாம் எனக்கு யாராவது பிறந்த நாள் வாழ்த்து சொன்னால், நாலு பேரு வாழ்த்து சொல்ற அளவிற்கு வாழ்வதே சாதனையாத்தான் எடுத்துக்கிறேன். இரண்டாவது இப்போ விருந்துக்காக யாரும் வாழ்த்து சொல்றதில்லை ஏன்னா எல்லாரும் குடும்பம், வேலை, என்று ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் பிறந்த நாள் என்பது வயது ஏறிகொண்டிருகிறது என்று செய்தி சொல்லும் நாளாகத்தான் இருக்கிறது.
 
முடிந்தவரை நிறைய நல்ல அனுபவங்களை பெற்று விட வேண்டும் இந்த வாழ்நாளில். அதுபோலவே இறுதிவரை சமூகத்திற்கு பயனுள்ளவனாகவே வாழ்ந்திட வேண்டும் என்பதே எனது ஆவா...

Thursday, 26 January 2023

போலிகள் நெடுநாள் நிலைக்க முடியாது – 2

 இரங்கராஜன், கந்தன் அவர்களை சந்தித்து தன்  வீட்டில் நடந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டு. (முன்னர் நடந்ததை அறிய பாகம் 1-ஐ காண்க)

இந்த முறை தாங்கள்  அனைவரும் கந்தனை அவரது வீட்டில் சந்திக்க விரும்புவதாக  கூறினார்.

கந்தனும் ஏற்று கொண்டார், பேரனின் செயலுக்கு தானும் வருந்துவதாக கூறினார்.

இரங்கராஜனுக்கோ கொண்டாட்டம் தாளவில்லை தனது பணக்கார நண்பர்களிடம் தான் கந்தனின் வீட்டு விருந்துக்கு செல்வதை கூறிக்கொண்டான்

 


அந்த நாளும் வந்தது, கந்தனின் வீட்டை அடைந்ததும் கந்தனின் பேரன் தான் வரவேற்றான்.

உள்ளே நுழைகிறபோது சொன்னான்  "வெளியிலிருக்கிற தொட்டியில் முகத்தைக்

கழுவி விட்டு வாருங்கள் " என்று

இரங்கராஜனுக்கோ வியப்பாக இருந்தது. "வழக்கமாகக் கை கால்களைக் கழுவி விட்டு வா!

என்று தானே சொல்வார்கள்! இவன் என்ன முகத்தைக் கழுவி வரச் சொல்கிறான் " என்று. அதனால் அவனிடமே  கேட்டு விட்டார்

அவன் பதில் சொல்லவில்லை.

சரி அவர்கள்  வீட்டிற்கு  வந்துள்ளோம் எனவே அவனோடு சண்டை போட வேண்டாம் என

எண்ணிக்கொண்டு  வேண்டா வெறுப்பாக முகம் கழுவச் சென்றார் .

முகத்தை கழுவி விட்டு அதற்கு மேல் இருக்கிற கண்ணாடியைப் பார்த்தபோது .

கிறுக்கலாக கந்தனின் பேரன் அதில் எழுதி இருந்தான்.


 

"வாருங்கள்...

முகத்தைக் கழுவி

அழுக்கைக் கழட்டி

எறிந்ததைப் போலவே

முகமூடியையும் கழட்டிவிட்டு

என் வீட்டிற்கு

உள்ளே வாருங்கள்" என்று.

 

-முனைவர் ஜா.சலேத் அவர்களது கவிதையால் ஈர்க்கப்பட்டு அடியேன்  எழுதிய சிறுகதை