Friday, 10 August 2012

பாட்...........டி வடை சுட்டாங்க, வடை சுட்டாங்களா...


எனது மூன்று வயது மகன் பாட்டி கதையை அதிகம் கேட்டதனாலேயோ என்னவோ, இயக்குனர் திரு சங்கர் போல் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லுகிற அளவிற்கு பல வித்தியாசமான கிளை கதைகள் வச்சிருக்கான்.

உதாரணத்திற்கு, "நரி வடையை எடுக்கறதுக்காக காக்காவ பாட்டு பாட சொல்லுச்சா ஆனா பூனை காக்காட்டருந்து வடையை பிடுங்கிருச்சி!!"


இனி- சிறு கதை, ( பல பேர் வெவ்வேறு வடிவங்களில் சொன்ன கதைதான், நானும் முயற்சி பண்ணியிருக்கேன்)

வளைகுடாவில் இருக்கும் செல்வத்திற்கு நம்பவே முடியவில்லை, தான் அத்தனை முறை கூப்பிட்டும் வர மறுத்த இந்தியாவிலிருக்கும் தனது அம்மா இன்று வீட்டு வாசலில். சந்தோசம் ஒருபுறமும் ஆச்சரியம் மறுபுறமும் சேர்ந்து அவருக்கு என்ன செய்வதென்றறியாமல் திகைத்து நின்றார்.



அடுத்த கணம் சுதாரித்து கொண்டு, நீங்க எப்படி இங்க வந்தீங்க என்று தன் மூளையை குடைந்து கொண்டிருந்த வினாவை எழுப்பினார். மூக்கம்மாளுக்கோ பயங்கர கோபம், வந்தவங்களை வாங்கன்னு வரவேற்க்காம வெளியில் நிக்க வச்சு கேள்வி கேக்குறதுதான் இப்போ நம் பண்பாட மாறிபோச்சா..?. என் பேரன் என்னை ஐரோப்பாவுக்கு வர சொன்னான், நான்தான் என் மகனை பார்க்கணும் அதுக்கு ஏற்பாடு செய்யுன்னு சொன்னேன், இப்போ புரியுதா நான் எப்படி இங்க வந்தேன் என்று, என்றவர்
தன்  பேத்திகளை கண்டதும் அள்ளி அணைத்துக்கொண்டார்.

செல்வத்திற்கு அப்போதுதான் ஐரோப்பாவில் இருக்கும் தன் அக்காவின் மகன் ஞாபகம் வந்தது, எது எப்படியோ அம்மா வீட்டிற்கு வந்ததில் ரொம்ப சந்தோசம் என விட்டு விட்டார்.

மதிய உணவு தடபுடலாக தயாரானது. மூக்கம்மாள் திக்கு முக்காடி போனாள் எதை உண்பது என்றல்ல, மகனை கண்ட சந்தோசம், மருமகளின் உபசரிப்பு, பேத்திகளின் குறும்புத்தனங்கள் இவைகளை கண்டதும் மகிழ்ச்சி மிகுதியில் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஏனென்று கேட்ட செல்வத்திடம், ஏன்னு விவரிக்க முடியல்ல ஆனால் ரொம்ப சந்தோசமாக இருக்குடா என்றார்.

செல்வத்திற்கு ஆச்சரியமாக இருந்தது, அம்மா அன்பானவள் தான் ஆனால் இந்தளவிற்கு தனதன்பை வெளிகாட்டியதில்லை.

சரிம்மா சாப்பிட்டுவிட்டு நல்லா தூங்குங்க பின்பு பக்கத்தில் இருக்கிற பூங்காவிற்கு செல்லலாம் என்றார்.

மாலை பூங்காவில், மூக்கம்மாள் குழந்தையாகவே மாறிபோனாள் பேத்திகளுடன் ஒரே விளையாட்டு அவ்வபோது செல்வத்தின் தலையை வருடியும், மருமகளின் கைகளை பற்றியும் சண்டையெல்லாம் போட்டுகொள்ளகூடாது பேத்திகளை நல்ல படியாக வளர்க்கணும் என்று கூறி கொண்டே இருந்தார். செல்வமும் நீங்க கற்று கொடுத்த நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும் தான் என் குழந்தைகளுக்கும் கற்று கொடுத்திட்டு இருக்கேன் அதனால அவர்களும் நல்ல படியாகத்தான் வளர்வார்கள் என்று பதிலளித்தார்.


பூங்காவிலிருந்து வீடு திரும்பிகொண்டிருந்த போது செல்வத்தின் அலுவலக நண்பர் அப்துல்லா வை சந்தித்தனர்.

அவர் செல்வத்திடம், ஊரில் இருந்து உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, முதலில் உங்களது கைத்தொலைபேசிக்கு முயற்சித்ததாகவும் தொடர்பு கிட்டாத நிலையில் அலுவலக எண்ணிற்கு அழைத்ததாகவும் கூறினார்கள். ஆனால் இணைப்பு பாதியில் துண்டிக்க பட்டதனால் எதற்க்காக அழைத்தார்கள் என அறியமுடியவில்லை என்றார். வீட்டிற்கு சென்றதும், அதுபற்றி விசாரிப்பதாக கூறி அவரிடமிருந்து விடை பெற்றனர்.

வீட்டை அடைந்ததும் செல்வம் தனது மடி கணினியை உயிர்ப்பித்து ஊருக்கு தொலைபேசி அழைப்பு விடுப்பதற்கு ஆயத்தமானார், அவரது மனைவி இரவு உணவு சமைப்பதற்கு சமயலறைக்கு சென்று விட்டார். மூக்கம்மாள், பேத்திகள் இருவரும் படுக்கை அறையில் குதித்து விளையாடுவதை ரசித்து கொண்டிருந்தார்.

செல்வத்தின் தொலைபேசி அழைப்பு சென்று கொண்டிருந்தது ஒருவரும் எடுக்கவில்லை, சற்று நேர காத்திருப்பிற்கு பின்பு இணைப்பு கிடைத்தது. எதிர்முனையில் செல்வத்தின் அக்காள் அழுதுகொண்டே யார் என வினவினார். நான் செல்வம் பேசுகிறேன், ஏனக்கா அழுகிறாய் என்றார்.

மறு வினாடி தம்பி அம்மா இறந்திட்டாங்க என்று நடந்தவற்றை விளக்கலானார்.

செல்வத்திற்கு ஒன்றும் புரியவில்லை அப்படியானால் இங்கு இருப்பது..? அதற்குள் செல்வத்திடம் வந்த அவரது மனைவி, என்னங்க சாப்பாடு தயார் வீடு முழுவதும் தேடியாச்சி அத்தையை எங்கங்க காணும்..?!!



குறிப்பு :- எனதிந்த பதிவின் நோக்கம் என் பாட்டிக்கான அஞ்சலி, அவர்கள் கடந்த ௦8-௦8-2012 அன்று காலமானார்.

நான்கு தலைமுறை கண்டவர்கள் தான், என்றாலும் அவர்களுடனான எனது நிகழ்வுகளை பின்னோக்கி பார்க்கும் போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை. ஏன்னென்றால் ரொம்ப வெள்ளந்தியானவர்கள், எப்போதும் அன்பான புன்னகையை அவங்க முகத்தில பார்க்கலாம், குறும்புத்தனமான பேச்சுக்கும் அவர்களிடத்தில் பஞ்சமில்லை.( மேலே உள்ள புகைபடத்தில் என் அண்ணனுடன், என் பாட்டி )

எங்க அப்பா அம்மா கால்களில் விழுந்து எத்தனை முறை வணங்கியிருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் சிறு வயதில் அதிகம் முறை என் பாட்டி கால்களில் விழுந்து வணங்கியிருகிறேன் ஏன்னா கால்ல விழுந்தா வாழ்த்துவதோடு சாமி படம் பக்கத்தில் வைத்திருக்குற சின்ன பாத்திரத்திலிருந்து பணம் எடுத்து குடுப்பாங்க.

என் மனைவியை விட, அதிகம் முறை என் பாட்டியுடன் தான் அதிகம் திரைப்படம் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் என் அம்மாவிடம் திரைப்படம் பார்க்க அனுமதி வாங்குவதென்பது இயலாத காரியம், அதுவே என் பாட்டி என்றால் இந்த படத்திற்கு போறோம் பாட்டி என்றால் போதும்.

இறப்பிற்கு பின்பான நிலைகளை பற்றி உயிருடன் இருப்பவர்கள் அறிய வாய்ப்பில்லை ஆனால் வெள்ளை மனமும் குழந்தை உள்ளமும் கொண்ட என் பாட்டி, அங்கும் ஓர் உயர்ந்த நிலையை அடைவார் என்பதில் எனக்கெந்த ஐயமும் இல்லை.




No comments: