Thursday 3 January 2013

தூத்துகுடியிலிருந்து சென்னை - பயண அனுபவம் (எங்கேயும் எப்போதும்)

தூத்துகுடியிலிருந்து சென்னை சுமார் 660 கி.மீ. கைக்குழந்தையுடன் பயணிப்பவர்களுக்கு பேருந்தை விட இரயில் பயணம் சுகமானது .


தூத்துகுடியிலிருந்து சென்னை செல்லும் இரயில் வண்டியில் (முத்துநகர் விரைவு இரயில் வண்டி ) இடம் கிடைக்காத காரணத்தால்

திருச்செந்தூரிலிருந்து புறப்படும் செந்தூர் விரைவு இரயில் வண்டியில் முன்பதிவு செய்திருந்தேன். இடையில் தஞ்சாவூரில் நானும் எனது மூத்தமகனும் ஓர் கல்யாண அழைப்பிற்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதென்பது திட்டம்.

திருச்செந்தூரிலிருந்து சென்னை சுமார் 780 கி.மீ. (19.45 க்கு புறப்பட்டு அடுத்த நாள் 11.40 க்கு சென்றடையும் ) 16 மணி நேர பயணமென்பதால் பொதுவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால்தான் அதில் எப்பொழுதும் பயணச்சிட்டு இருக்கும் (முருகக்கடவுளின் விழாக்காலங்களைத் தவிர்த்து )

பயணதேதியன்று திட்டப்படி தூத்துகுடியிலிருந்து சிற்றூர்ந்து மூலம் திருந்செந்தூர் அடைந்தோம். தூத்துக்குடியில் பரோட்டா ரொம்ப நல்லா இருக்கும். பரோட்டாவும் இட்லியும் இரவு மற்றும் காலை உணவுக்காக வாங்கி வைத்து கொண்டோம். ஏனென்றால் இரயில் வண்டியிலும், இடையில் வரும் இரயில் நிலையங்களிலும் சரி சாப்பாடு சுமாராகத்தான் இருக்கும் .

வண்டியில் ஏறி அமர்ந்தாயிற்று, வண்டி புறப்பட்டு காயல்பட்டினத்தை அடைந்ததும் சக பயணிகள் ஏறிகொண்டார்கள் சிறிது நேர பயணத்திற்கு பிறகு பொதுவான உரையாடல்கள் ஆரம்பம்மாயிற்று. அதில் சற்று எடை கூடிய இஸ்லாமிய சகோதரர் ஒருவர் பிரயாணத்தின் போது தனக்கு ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையோடு சொல்லிகொண்டிருந்தார்.

பொதுவாக இரயில் பெட்டியில் கீழ் படுக்கை (lower berth), நடு (வில் உள்ள ) படுக்கை (middle berth ), மேல் படுக்கை (upper berth ) என்று இருக்கும். இதில் வயதானவர்களுக்கும், குழைந்தையுடன் பயணிப்பவர்களுக்கும் கீழ் படுக்கை வசதியானதாக இருக்கும். எடை கூடிய நபர் ஓவ்வோருதடவையும் தனது எடை காரணமாக கீழ் படுக்கையை முன்பதிவு செய்திருந்தாலும், யாரவது ஓர் வயதானவர் பயணத்தின் போது கேட்டு பெற்று கொள்வார், வேறு வழியில்லாமல் கொடுக்கவேண்டியிருக்கும் என்று வருத்தபட்டார்.

பின்பு அனைவரும் தூங்க சென்றுவிட்டனர், சுமார் 5.30 மணிக்கு (1 மணி நேரம் தாமதமாக ) இரயில் தஞ்சாவூரை வந்தடைந்தது. அங்கு நானும் எனது மூத்த மகன் மற்றும் என் மனைவியின் பெற்றோர்கள் இறங்கி, பட்டுகோட்டை செல்லும் பேருந்தில் ஏறினோம். அந்த காலை நேரத்திலும் பேருந்தில் நெரிசல் அதிகமாகவே இருந்தது.

ஒரு 30 நிமிட பயணத்திற்கு பிறகு உட்கார இடம் கிடைத்தது. அந்த பேருந்தில் இரண்டு நடத்துனர்கள் இருந்தார்கள், அது இல்லாமல் பரிசோதகர் ஒருவரும் இடையில் ஏறிகொண்டார் . அந்த அதிகாலை நேரத்திலும் நிறைய பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்தார்கள் அவர்களது புத்தக மூட்டையை வாங்கிக்கொண்டேன் எனது அருகில் தூங்கிகொண்டிருந்தவரையும் எழுப்பி சில புத்தக பையை கொடுத்து அடுக்கினேன்.

பள்ளி மாணவர்களையும் புத்தகப்பையையும் பார்க்கும்போது சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஞாபகத்திற்கு வரும். "ஒரு பள்ளி மாணவன் புத்தகமூட்டையோடு பேருந்தில் ஏறும்போது கொளுத்துவேலை செய்கிறவரை லேசாக இடித்துவிட்டார், அதற்கு அவர் அந்த மாணவனை காய்ச்சி எடுத்துக்கொண்டுவந்தார் "சரியான எமனுங்க ஒழுங்கா பேருந்தில் ஏற தெரியாது, .... அதோடு இல்லாமல் நாங்கயெல்லாம் அந்தகாலத்துல படிக்கும்போது என்று நீட்டி முழங்கினார் (பேருந்தில் புத்தகபையோடு ஏறுவதோட சிரமம், மாணவனுக்கு மட்டும்தான் புரியும்). அவர் மீது எனக்கு கோபம் அதிகம் இருந்தபோதும் ஒரேயொரு வார்த்தைதான் சொன்னேன் "அண்ணே அந்த காலத்துல நான் படிக்கும்போது, படிக்கும் போதுன்னா, என்ன doctor ருக்கா (மருத்துவ படிப்பு) படிச்சிங்க, கொளுத்துவேளை தானே செய்றிங்க அப்போ என்ன படுச்சிங்க எப்பிடி படிச்சிருப்பிங்கன்னு எங்களுக்கு தெரியாதா விடுண்ணே" என்று சொன்ன பிறகுதான் அமைதியானார்.

பேருந்து பட்டுகோட்டையை அடைந்ததும் அங்கிருந்து பேராவூரணி செல்லும் அரசு பேருந்தில் ஏறினேன்(6A ). அப்பேருந்தில் எனதருகில் ஓர் பள்ளி மாணவன் அமர்ந்திருந்தான். நடத்துனர் அவனிடம் பயணச்சிட்டு வாங்கியயிற்றா என்று கேட்க அதற்க்கு அம்மாணவனோ இலவச பயண அட்டை வைத்திருப்பதாக கூறினார். நடத்துனரோ அட்டையை எடுத்து காண்பிக்கும்படி கூறினார். மாணவனும் பயண அட்டையினை நடத்துனரிடம் கொடுத்தார், நடத்துனரும் சில வினாடிகளுக்கு பின் கொடுத்துவிட்டார்.
சாலையின் இருபுறமும் வெளிச்சம் பரவி இருந்தது, நிலம் பச்சை ஆடை உடுத்தியிருந்தது ஆங்காங்கே கிளிசல்கலாக சிறிது வறண்டும் காணப்பட்டது. ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு நான் இறங்கவேண்டிய நிறுத்தத்திற்கு வந்த பொழுது, நடத்துனர் எனதருகில் பயணித்த மாணவனிடம் எங்கு இறங்கவேண்டும் என்று கேட்டார். அதற்க்கு மாணவனும் அடுத்த நிறுத்தத்தில் என்று கூறினார். நடத்துனரோ உன் பயண அட்டையில் போன நிறுத்தம் வரைதானே எழுதியிருக்கு எடு 4 ரூபாய் என்று பெற்று கொண்டார். எனக்கு வியப்பாக இருந்தது அதேசமயத்தில் பள்ளி மாணவன் என்ற அனுதாபம் சிறிதும் இல்லையே என்ற வருத்தமும் இருந்தது.

கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று அருகாமையில் இருந்ததால் நடந்தே மண்டபத்தை அடைந்தோம். கல்யாணம் சிறப்பாக முடிந்ததும் மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி அங்கிருந்து புறப்பிட்டோம்.

எங்கேயும் எப்போதும்
பேராவூரணி லிருந்து - புதுக்கோட்டை -அங்கிருந்து திருச்சி - அங்கிருந்து சென்னை என்பது திட்டம்

மண்டபத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்து நிலையம் சற்று தள்ளி உள்ளது (அதிகபட்சம் 1 கி.மீ .) மூன்று சக்கர வாகனத்தில் பயணித்தோம். (ஓட்டுனர் கராராக 40 ரூபாய் என்றால் போலாம் என்றார்)

பேருந்து நிறுத்தத்தில் தனியார் வாகனங்கள் தான் அதிகம் காணப்பட்டது. நாங்கள் பேருந்து நிலையம் அடைந்தபோது மணி காலை 11.10. சரியாக 11.15 க்கு AVM என்கிற நிறுவன வண்டி புதுக்கோட்டை புறப்படும் என்றார்கள். அந்த வண்டியும் அப்பொழுதுதான் வந்த சேர்ந்தது. அதில் ஏறி அமர்ந்தோம் ஆனால் 11.40 க்கு புதுக்கோட்டை புறப்படவேண்டிய RMK நிறுவன வண்டி முதலில் புறப்பட்டு சென்றது. (11.15 லிருந்து 11.40 வரை உள்ள 25 நிமிடத்தில் ஏறும் பயணிகள் எண்ணிக்கையை வைத்தே அந்த பயண வருமானம் உள்ளது. AVM வண்டி வந்ததே 11.15 எப்படியும் 5 அல்லது 10 நிமிடத்திற்கு பிறகுதான் எடுப்பார்கள். அதில் தங்களுக்கு வருமானம் இழப்பு வரும் என்று RMK முந்திகொண்டார்கள் )

இப்போ பின்னாடியே AVM வண்டியும் சென்றால் பயணிகள் இல்லாமல் காலியாகத்தான் செல்லவேண்டியிருக்கும் என்று, அவர்கள் 11.35 க்கு செல்வதாக கூறினார்கள். அதுபோல வண்டி 11.35 க்கு புறப்பட்டது. வழியெங்கும் பயணிகள் ஏறவே இல்லை. சிறிது நேர பயணத்திற்கு பிறகு ஒரு நிறுத்தத்தில் ஏறிய ஓர் வயதான பயணி "என்னப்பா இப்போதான் RMK போறான் பின்னாடியே நி வறியே" (பிரச்சனை என்னன்னா ஒவ்வொரு நிறுத்ததிலும் 5, 10 நிமிடம் நிறுத்தி எல்லா பயணிகளையும் RMK பேருந்து ஏற்றிக்கொண்டு செல்கிறது ). இந்த விசயத்தை கேட்டவுடன் AVM பேருந்தின் ஓட்டுனருக்கு கோபம் தலைக்கேறியது.

அதுக்கு பிறகு வண்டி கட்டுபாட்டில் இல்லை. (ஓடவில்லை, பறந்தது). மயிரிழையில் தப்பிய சம்பவங்கள் நிறைய ஏற்பட்டது ஒருவழியாக RMK நிறுவன பேருந்தை முந்தியாயிற்று. அதற்கப்புறம் எந்த நிறுத்தத்திலும் பேருந்து பயணிகள் இறங்க போதுமான அவகாசம் கொடுக்கவில்லை ஏனென்றால் RMK நிறுவன வண்டி தங்களை முந்திவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் அவரும் விடுவதாக இல்லை கிடைக்கும் சில நொடிகளைக் கொண்டு முந்திக் கொள்கிறார். இருவரும் மாற்றி, மாற்றி முந்தி சென்று மக்களை கலங்கடித்தார்கள்.

புதுக்கோட்டை செல்லும் வரை எனக்கு சிறிது பதட்டமாகவே இருந்தது. ஏனென்றால் பல விபத்துக்கள் இந்த மாதிரியான உணர்சிகொந்தளிப்பில் நடைபெற்றவையே. ஒருவழியாக புதுகோட்டை அடைந்து அங்கிருந்து திருச்சி சென்றேன். அங்கு மதிய உணவை முடித்துவிட்டு அங்கிருந்து மாலை 3.45 க்கு புறப்பட்டு சென்னைக்கு 11.00 மணிக்கு வந்தடைந்தோம்.

No comments: