Saturday, 26 December 2020

சங்க இலக்கிய பாடல்கள் எளிய வடிவில்

 வணக்கம் வலையுலக  நட்புறவுகளே 

 

திருமதி.வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் 

எளிய முறையில் சங்க இலக்கிய பாடல்களை கற்பிக்கிறார்.. அவரது நோக்கம் தமிழின் பெருமை அனைவரரையும் சென்றடைய வேண்டும் என்பதே...

காரணம் வெகு சிலரே தமிழின் தொன்மை அறிந்து, கொண்டாடி, அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறார்கள். பெரும்பாலோர் தனது  அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பார்களா என்கின்ற கேள்வியும் எழுகிறது என்பதே.   (வேடிக்கையாக குரங்கு கை  பூமாலை என்று வர்ணிக்கிறார். வேறு மொழிக்காரருக்கு இப்படி ஒரு கொடை கிடைத்திருந்தால் இந்நேரம் உலகளவில் தமிழ் உச்சம் தொட்டிருக்கும்  என்று )

ஒவ்வொரு ஞாயிறுமன்றும் இரவு CET (UTC+01:00) 6.00 மணிக்கு ( இந்திய நேரம் மதியம் 1.30 க்கு ) தொலைப்பேசியூடாக பயிற்சி கூட்டம் நடைபெறுகிறது.

சென்றைய  உரையாடலில்

குறுந்தொகை 269, -கல்லாடனார்,

நெய்தற் திணைதலைவி தோழியிடம் சொன்னது,

 

சேயாறு சென்று, துனை பரி அசாவாது  

[சே =தொலைவு, ஆறு=வழி, துணை பரி = வேகமாக கடந்து, அசாவாது=தளராமல்]

உசாவுநர்ப் பெறினே நன்று, மற்றில்ல,

[உசாவுநர்ப்= ஆலோசனைக் கூறுபவர், பெறினே=பெற்றால், நன்று மன்  இல்ல =நல்லதாக இருக்கும்ல ]

வயச்சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும்

[வய=வலிமையான,எறிந்த=ஏற்பட்ட]

நீல நிறப் பெருங்கடல் புக்கனன், யாயும்

[புக்கனன்= புகுந்தார், சென்றுள்ளார், யாயும் =என் தாயும் ]

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய

[வெண்ணெல்=வெள்ளை நெல், தரீஇய=பெறுவதற்கு]

உப்பு விளை கழனிச் சென்றனள், இதனால்,

[உப்பு விளை கழனிச்= உப்பு விளையும் உப்பளம்]

பனியிரும் பரப்பில் சேர்ப்பற்கு

[பனி=குளிர்ந்த, இரும்=பெரும், பரப்பில் சேர்ப்பற்கு=கடற்கரையின் தலைவனுக்கு]

இனி வரின் எளியள் என்னும் தூதே.

வரின்=வந்தால், எளியள்=பெறுவதற்கு எளியவள்.

 

தலைவன் தொலைவில் இருக்கிறான், அந்த தொலைவான வழியை, தளராமல் விரைந்துச் சென்று. தலைவனிடம், ஆலோசனைக் கூறுபவரைப் பெற்றால் மிகவும் நல்லதாக இருக்கும்ல..

(எதுக்குன்னு கேக்குறீங்களா? )

வலுவான சுறா மீனால் ஏற்பட்ட புண் தணிந்து என் தந்தை நீலக் கடலுக்குச் சென்றுள்ளார்.  என் தாயும் உப்பிற்கு மாற்றாக வெள்ளை நெல்லைப் பெறுவதற்கு உப்பு விளையும் உப்பளத்திற்குச் சென்றுள்ளாள்.   குளிர்ந்த பெரிய கடற்கரையின் தலைவர்(தலைவன்) இப்பொழுது வந்தால்,  நான் பெறுவதற்கு எளியவள் என்பது நான் விடும் தூது.

இந்த பாடல் எழுதப்பட்டது கி.மு இரண்டாம் நூற்றாண்டு (குறைந்த பட்சம்)

என்னென்ன விசயங்கள் இருக்குன்னு பார்க்கலாம்

1.   1.தலைவி தோழியின் வாயிலாக தலைவனிடம் கூறியது. தலைவனுக்கான தூது.

நம் உள்ளத்தில் இருப்பதை நேரடியாக விரும்புவரிடம் சொல்ல முடியாமல் நண்பர்களிடம்  சொல்லி மகிழ்வோமே அது தான், இலக்கிய சுவையோட சொல்லியிருங்காங்க

      2. தொழில் நுட்பம் இல்லாத காலகட்டத்தில் மீன் பிடித்தலில்,சுறாவை வேட்டையாடுதல் இயல்பான நிகழ்வாக இருந்திருக்கிறது.

3. 3. பண்டமாற்று முறை கேள்விப்பட்டிருக்கோம், உப்பிற்கு நெல் பெறுவது, வியப்பாக இருக்கு. காரணம், இன்றைய விலையின் படி ஒரு ஆழாக்கு  நெல்லிற்கு எத்தனை மூட்டை உப்பு  கொடுத்திருப்பார்களோ..!

 4 4.பாடல், பாடல் பின்னணி மற்றும் விளக்கத்தோடு வகுப்பு இருப்பதால், எல்லோராலும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.. வாய்ப்பு இருப்புவார்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கொசுறு :-  பாடலாசிரியர் கபிலன் வில்லு படத்தில், அவரது நடையில் இதே நிகழ்வை....(கொஞ்சம் அதிகமாக எளிமை படுத்திவிட்டார் )

 


 

 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய முயற்சி